03.08.2023, சென்னை
கடந்த நாற்பது ஆண்டுகாலமாக பயிர்த் தொழில் செய்துவரும் நிலத்தை அபகரிக்கும் வனத்துறை!.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள திருச்சலூர் அம்மாகாடு பகுதியில் புதர்மண்டிகிடந்த இடத்தை விளைநிலமாக்கி கடந்த 40ஆண்டுகாலமாக தங்கள் அனுபவத்தில் பயிர்தொழில் செய்து வருகின்றனர் அந்த ஊரைச் சேர்ந்த பதினேழு குடும்பத்தினர் இந்நிலையில் 40 ஆண்டாக பயிர்த்தொழில் செய்துவரும் நிலத்துக்குள் நுழைய தடைவிதித்தது வனத்துறை!
அப்பகுதி வனத்துறைக்கு சொந்தமான நிலம் எனக்கூறி உழவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான திருச்சலூர் கிராமம் அம்மா தோப்புக்காடு அருகே பயன்பாடின்றி கிடந்த சுமார் 30 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை அப்பகுதியை சேர்ந்த 17 உழவர் குடும்பத்தினர் சீரமைத்து கடந்த 40 ஆண்டுகளாக பயிர்தொழில் செய்து வருகின்றனர்.
இதில் சிலர் கிணறு வெட்டி போர்வெல் அமைத்து மின் இணைப்பு பெற்று, 10-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மா, பலா, தென்னை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அந்த இடம் வனத்துறைக்கு சொந்தமானது எனக்கூறி, உழவர்கள் அப்பகுதிக்குச் செல்ல வனத்துறை தடை விதித்தது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியருக்கு உழவர்கள் புகார் மனு அளித்தனர்.
இதையடுத்து ஆகஸ்ட் 8-ம் தேதி இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில் அம்மா காடு பகுதியில் இது வனத்துறைக்கு சொந்தமான இடம். அத்துமீறி நுழைபவர்கள் வனச் சட்டத்தின்படி தண்டிக்கப் படுவார்கள்’ என எச்சரிக்கை பலகை வைக்கப் பட்டுள்ளதால் உழவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி உழவர்கள் கூறுகையில் திருச்சலூர் கிராமத்தில் பயன்பாடின்றி புதர்மண்டி கிடந்த சுமார் 30 ஏக்கர் நிலத்தை சீரமைத்து 17 குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வேளாண்மை செய்து வருகிறோம். இந்த நிலத்துக்கு, கடந்த 1986-ம் ஆண்டு முதல் தற்போது வரை நில அனுபவத்துக்கான பசலி தீர்வையும் செலுத்தி வருகிறோம்.
இந்நிலையில் விளை நிலங்களுக்குள் செல்ல விடாமல் வனத்துறையினர் தடுப்பது எவ்வகையில் நியாயம்? விளைநிலங்களை பராமரிக்க தங்களை அனுமதிக்க வேண்டும், மேலும் பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
இதுகுறித்து வருவாய்த் துறையினரிடம் கேட்டபோது, அந்த இடம் வருவாய் ஆவணங்களில் அரசு புறம்போக்கு காடு எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுகாடு என உள்ளதால் நிலத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டுகளில் நிலத்துக்கு தீர்வை போட்டுள்ளனர். தற்போது தீர்வை ஏதும் போடப்படவில்லை என்றனர்.
நாற்தாண்டு காலம் நிலத்தை சீர்படுத்தி பயிர்த்தொழில் செய்துவந்த இந்த நிலம் திடீரென எப்படி வனத்துறைக்கு சொந்தமானது? காடாக இருந்த இடங்களைத்தான் மக்கள் வசிக்கும் ஊராகவும் விளை நிலங்களாகவும் திருத்தினர் நம்முன்னோர் அதனடிப்படையில் இந்த நிலங்களை அந்த பதினேழு குடும்பத்துக்கே கொடுப்பதுதான் முறை!
இத்தனை ஆண்டுகளாக பயிர்த்தொழில் செய்ய அனுமதித்த அரசு அதிகாரிகளே குற்றவாளிகள்! எனவே இனிவரும் காலங்களில் இப்படியான தவறுகள் நடக்காவண்ணம் பார்த்துக்கொள்வது அரசின் கடமை!.
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்