27.07.2023
இராஜரிஷி, கவிச்சிங்கம் சு.அர்த்த நாரீச வர்மா அவர்களின் பிறந்தநாளில் நாட்டுக்கு ஆற்றிய சேவை,தியாகதைப் போற்றுவோம்! .
இந்திய விடுதலைப் போராட்ட வீரர, தமிழக எல்லைப் போராட்ட தீரர், இந்தியாவில் முதல் மதுவிலக்கு சட்டம் வரக்காரணமானவர் மது ஒழிப்பும் போராளி, தேசிய கவி பன்மொழிப் புலவர் மரபுவழி மருத்துவம் அறிந்தவர். வானியல் சாஸ்திரம் தெரிந்தவர்,கர்நாடக இசைப்பாட்கர், பத்திரிக்கையாளர், எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர், என்று பன்முகத் தன்மை கொண்டவர் இராஜரிஷி, கவிச்சிங்கம் அர்த்தநாரீர் வர்மா, அவர்கள் 27.07.1874 அன்று சேலத்தில் பிறந்தார்,
தந்தையார் பெயர் சுகவன நாயக்கர், தாயார் பெயர் லஷ்மி அம்மாள், தஞ்சை மாவட்டம் திருப்பூந்துருத்தியில் குருகுல கல்வி பயின்றார் கரம் பாத்திர சுவாமிகளிடம் சிவ தீக்ஷை பெற்றார் நான்கு வேதங்களையும் 18 புராணங்களையும் கற்று தேர்ந்து பரிஷத் என்ற பட்டம் பெற்றார். சேலம் சுதேசாபிமானி அச்சுக்கூடத்தில் மேலாளராக சேர்ந்து வாழ்க்கையை தொடங்கினார்.
அந்த காலகட்டத்தில் இந்தியா ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு கிடந்தது. நாடு முழுவதும் சுதந்திர தாகம் மக்களிடம் இருந்தது. அறிவுமிக்க சான்றோர்கள் பத்திரிக்கைகளைத் தொடங்கி மக்களுக்கு சுதந்திர வேட்கையை ஊட்டினார் வர்மா அவர்கள், நாட்டு விடுதலைக்காகவும் குல மேம்பாட்டிற்காகவும், தொடர்ந்து பாடுபட்டு வந்தார்.
1921 ஆம் ஆண்டு மகாகவி பாரதியார் இறந்த போது அவருக்காக வர்மா அவர்கள் எழுதி பாடிய
இரங்கற்பா சுதேசமித்தரன் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது.
பாரதியார் காலனுக்கு உரைத்தல் பாடலில் காலா, உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன் என் காலருகே வாடா, சற்றே உனை மிதிக்கிறேன்! என்று பல்லவியில் கூறி 1919 டிசம்பர் மாதம் சுதேசமித்திரன் பத்திரிக்கையில் வெளியிட்டார்.
காலன் தன்னைக் கெட்ட மூடன் என்று கேவலப்படுத்திய பாரதியாரைக் கொல்லச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தான் பாரதியார் தேங்காய் பழம் கொடுத்து அன்புசெலுத்திய பார்த்தசாரதி கோயில் யானை மதம் பிடித்து அவரைத் தூக்கியெறிந்து காயப்படுத்தும் படி செய்து 11.9.1921 அன்று அவரது உடலையும் உயிரையும் வேறாக்கினான்!, மறுநாள் வர்மா காலனைய பழித்து பாரதியாருக்கு இரங்கற்பா பாடினார். இது 14.9.1921 அன்று சுதேசமித்திரன் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது.
கவிச்சிங்கம் வர்மா பாரதி மீது பாடிய இரங்கற்பா
இடியேறு எதிர்ந்து படவர வென்னச்
செந்தமிழ்மாது நொந்து வருந்தவும்.
இசைத்தமிழ்வாணர் அசையா தழுங்கவும்
நேற்று நின்னுடனுயிர் வேற்றுமை கண்ட
கூற்றுவனென்னும் மாற்றலன் நின்னுயிர்
பருகின னன்றி யருகினனின்றே
தமிழ்ச்சுவையின்பஞ் சற்று மறியான்
அமிழ்தின் றேறல் அதுவென வறியான்
ஒப்பிலா பாரதி சுப்பிரமணியநின்
நாட்டுப்பாட்டின் நலஞ்சிறி துணரான்
கண்ணன் பாட்டின் கருத்தைத் தேறான்
வீரச் சுவையதில் விளங்குவ துணர்கிலான்
நேறின்னும் நெருங்கிலை யுண்டான்
நினைக்க நினைக்க நெட்டுயிர்ப் பெடுக்கும்
வினைவிளை காலம் வேறில்லை
பிணையும் பிறப்பாய் பெறுவாய் பணியே!.
ஆர்வலன்
சு. அர்த்தநாரீச வர்மா
பொருள்:
இடிபோல் முழங்கும் ஆண் யானை குணங் கெட்டு மதம் பிடித்து வர, செந்தமிழ் அன்னை மணம் நொந்து வருந்தவும் இசை பாடுவோரும் தமிழ்ப் புலவரும் காலசையாமல் மணம் வருந்தி யழியவும் நேற்று எமன் என்னும் பகைவன் உன் உடலையும் உயிரையும் பிரித்து வேறாக்கினான். அவன் உன் உயிரைக் குடித்தானே தவிர இரக்கப்பட்டவனல்லன், உன் தமிழின் சுலையின் இன்பத்தைச் சிறிதும் அறியமாட்டன் அது அமிர்தத்தின் தெளி வென்று அவனுக்குத் தெரியாது.
இணையற்ற சுப்பிரமணிய பாரதி கூற்றுவன் நினது நாட்டுப் பாட்டின் நன்மையைச் சற்றும் உணரமாட்டான், கண்ணன் பாட்டின் கருத்தைத் தெரிந்து கொள்ளமாட்டான் அதிலுள்ள வீரச் சுவையை உணரமாட்டான். நீ சாவதற்கு இன்னும் நேரம் வரவில்லை. அதற்குள் உள் உயிரை யுண்டான். இதை நினைக்க நினைக்க மூச்சு தினறுகிறது. ஊழ்வினை உருத்துவந்து உன் உயிரைக் குடிக்கும் காலம் இதைவிட வேறில்லை. மீண்டும் பிறப்பாய் சுதந்திரப் போராட்டப் பணிபுரிவாய் என்று பொருள்பட பாடல் இயற்றினார்.
பாரதியின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஏழுபேரில் இருவர் வன்னியர் ஒருவர் வர்மா மற்றொருவர் கிருஷ்ணசாமி நாயக்கர் என்று கூறியுள்ளார் – வீரபாரதியில்.
1931 ஆம் ஆண்டு வர்மா அவர்களுக்கு நல்வாய்ப்பு கிடைத்தது. அப்போது காங்கிரஸ் கட்சி வீரபாரதி என்ற பெயரில் இந்திய துணைக்கண்டம் முழுவதும் பல்வேறு மொழிகளில் பத்திரிக்கை தொடங்கியது. தமிழில் மாணிக்கம் பிள்ளை அவர்களை வெளியீட்டாளராகக் கொண்டு வர்மா அவர்கள் ஆசிரியராக இருந்து வீரபாரதியை நடத்தினார். 26.04.1931 முதல் 29.09.1931 வரை வாரம் மும்முறையாக ஆறுமாதத்தில் மொத்தம் 68 இதழ்கள் வெளிவந்தன. இவற்றில் ஆங்கில அரசுக்கு எதிராக வர்மா அவர்கள் தீவிரமாக எழுதினார்.
பஞ்சாப் கவர்னராக இருந்த ஆங்கிலேயரை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் தூக்கிலிடப்பட்ட
அரிகிருஷ்ணன் என்ற இளைஞரை வீரபாரதியில் புகழ்ந்தார். சிறைச்சாலை இன்ஸ்பெக்டர் ஜெனரல் கர்னல் சிம்சன் என்பவரை கொலை செய்ததற்காக
அலிப்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்ட தினேஷ்குப்தா என்பவரை வீரபாரதியில் போற்றினார்.
தினேஷகுப்தாவிற்கு தூக்குத் தண்டணை விதித்த அலிப்பூர் ஜில்லா நீதிபதி கார்லிக் துரையை சுட்டுக்கொன்ற விமலதாஸ் குப்தாவை வீரபாரதியில் பாராட்டினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆங்கிலேய அரசு கொலைகாரர்களை ஆதரிப்பதாக வீரபாரதியின் மீது குற்றம் சாட்டியது. வீரபாரதியில் வந்த செய்திகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நாடாளுமன்றத்தில் வாசித்தது. பின்னர் Press Act (Emergency Powers) மூலம் வீரபாரதி தடைசெய்யப்பட்டது.
நாடாளுமன்றத்தில் தடைசெய்யப்பட்ட தமிழ்ப் பத்திரிக்கை வீரபாதி மட்டுமே. வீரபாரதி மூலம் கிடைத்த தொகையைக் கொண்டு ஷத்ரியன் இதழை 1931 இல் மீண்டும். கொண்டு வந்தார் வர்மா.
ஆங்கிலேயரின் தொடர் நெருக்கடியில் ஷத்ரியனும் நின்றுபோனது. ஆனால் வர்மா நிற்கவில்லை.
தொடர்ந்து
சமூகத்திற்கு தொண்டாற்றினார். தேசவிடுதலைக்கு போராடினார். வாழ்நாள் முழுவதும் கதர் அணிந்தார்.
ஷத்ரியன், க்ஷத்ரிய சிகாமணி, தமிழ் மன்னன். வீரபாரதி ஆகிய பத்திரிக்கைகளை ஆசிரியராக இருந்து நடத்தினார்.
கழறிற்றறிவார் அவர்கள் இந்திய தேசத்தின் பொதுச் சொத்து போன்றவர். இவரது கவித்துவம் அபாரமானது, அற்புதமானது. ஆழ்ந்த புலமை மிக்கது என்று திவான் பகதூர் வீ.ஆர். கிருஷ்ணய்யர் புகழ்ந்துள்ளார்.
சுப்ரமணிய பாரதியின் பாடல்களும், சேலம் அரத்தநாரீச வர்மாவின் பாடல்களும் மக்களுக்கு தேசபக்தியை ஊட்டுவதுபோல், கற்றை கற்றையாக அரசியல் நூல்களை ஓதியவர்களின்
சொற்பெருக்குகளும் பக்தியை ஊட்டா என்று திரு.வி.கல்யாண சுந்தரனார் போற்றியுள்ளார்
வர்மா பாரதியாரைப்போல பாமரமக்களுக்கு புரியும் வகையில் எளிய நடையில் எழுதி பத்திரிக்கைகளில் வெளியிட்டு மக்களுக்கு தேசபக்தியை ஊட்டினார் என திரு நாரண துரைக்கண்ணனார் பாராட்டியுள்ளார்
இந்திய விடுதலை போராட்டம் 1906 ம் ஆண்டில் அகிம்சை போர் என்றும். ஆயுத போர் என்றும் இரண்டு வழிகளில் முன்வைக்கப்பட்டன. இதனை திலகர் வழி என்றும், காந்தி வழி என்றும் கூறினர். தேசிய கவி அர்த்தநாரீச வர்மா இவை இரண்டிலும் பங்கேற்றார். திலகரை பின்பற்றிய தீவிரவாதிகள் மறைமுக பேரானி அமைப்புகளைத் தொடங்கினார். நாட்டில் உள்ள வீர இளைஞர்களுக்கு தூப்பாக்கி சுட கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் 1915 – 16 ம் ஆண்டுக்குள் (ஆனந்த வருடம்) ஆங்கிலேய ஆட்சியாளர்களை ஆயுதப் போரில் வீழ்த்த வேண்டும் என்றும் முடிவு செய்தனர். தமிழ்நாட்டில் வ.உ. சிதம்பரனார் இதற்கு தலைமையேற்றார். தீவிரவாதிகள் அமைப்புகாக தேசிய கவி அர்த்தநாரீச வர்மா கழற்றறிவார் சபை என்னும் அமைப்பை 1907ம் ஆண்டில் உருவாக்கினார். (கழற்றறிவர் என்பது சேரமான் பெருமான் நாயனார் என்னும் மன்னனை குறிக்கும் பெயராகும்]
இவருடன் ஆங்கிலேயருக்கு எதிரான தீவிரவாதிகளான கோவை பூபதி பழனியப்பா, மற்றும் கோ.நா. குப்புசாமி வர்மா ஆகியோரும் இணைந்திருந்தனர். பாண்டிய வாரிசுகளான சிவகிரி ஜமீன் ஆதரவையும் பெற்றிருந்தார். இந்த சபையின் கூட்டத்திற்கு தனது பள்ளித் தோழரான இராஜாஜியை அழைத்து வந்து அவரையும் தீவிரவாதிகள் கூட்டத்தில் சேர்த்தார் தேசிய கவி அர்த்தநாரீச வர்மா இதனால் இராஜாஜி தனது சென்னை வீட்டிற்கு திலகர் பவனம் என்று பெயர் வைத்தார். காந்தியின் மீது பற்றுக் கொண்டிருந்த வர்மா அவர்கள் காந்தியை போற்றியும் பாடல்கள் இயற்றி பாடியுள்ளார். 17.2.1934 ல் திருவண்ணாமலை வந்த மகாத்மா காந்திக்கு திருவண்ணாமலை மக்கள் சார்பாக பாராட்டு பத்திரம் எழுதி அச்சிட்டு வாசித்தவர் தேசிய கவி அர்த்தநாரீச வர்மா இந்திய நாட்டின் விடுதலை, தமிழ்நாட்டின் உரிமை, தமிழ் மொழியின் சிறப்பு. மது ஒழிப்பு உள்ளிட்ட நோக்கங்களுக்காக பாடுபாட்ட அர்த்தநாரீச வர்மா வன்னியர்களின் நலத்திற்காகவும் உழைத்தார் நீதிக் கட்சி ஆட்சியில் 4.12.1934 ல் சில பகுதிகளில் வசித்த வன்னியர்களை குற்றபரம்பரை சடத்தின் கீழ் கொண்டு வந்தனர், இந்த சட்டம் அறிவிக்கப்பட்டதும் அதனை தகர்த்தெரியும் நாள்வரை துக்க தினமாக அறிவித்து போராடினார். இது போன்ற போராட்டங்களின் விளைவாக 1935 ம் ஆண்டு குற்றபரம்பரை சட்டம் திரும்ப பெறபட்டது.
மது ஒழிப்பு தான் வர்மாவின் மிக முக்கிய முழக்கமாக இருந்தது. நாடு முழுவதும் சென்று மதுவிலக்கு பிரச்சாரம் செயதார் மதுவிலக்கு சிந்து எனும் கவிதை நூல் வெளியிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சேலம் மேச்சேரியில் 300 கிராமத்தினரை கூட்டி மாபெரும் மது ஒழிப்பு மாநாட்டை நடத்தினார். இம் மாநாட்டின் மூலமாக அர்த்தநாரீச வர்மா அவர்களின் கோரிக்கையை ஏற்று அவரது நண்பரான இராஜாஜி சேலம் ஜில்லாவில் மதுவிலக்கு கொள்கையை செயல்படுத்தினர் இது தான் இந்திய நாட்டின் முதல் மதுவிலக்கு சட்டமாகும்.
எப்பாடு பட்டாவது கல்வி கற்க வேண்டும் அனைவருக்கும் இலவசமாக கல்வி கற்பிக்க வேண்டும் என்பதை தனது கவிதைகள் வாயிலாகவும், எழுத்துக்கள் வாயிலாகவும் வலியுறுதினார் தானங்களில் கல்வி தான் முதல் தானம் என்றார். பெற்றோர் படிக்காமல் இருந்தாலும் பிள்ளைகளை படிக்கவைத்தே ஆக வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் பள்ளிக் கூடங்களை அமைக்கக் கூறினார்.
பகலில் நடத்த முடியாமல் போனாலும் இரவு பள்ளிகளையாவது நடத்தகோரினார். இந்திய நாட்டின் விடுதலைக்கு போராடிய அதே நேரத்தில் தமிழ்நாட்டின் மீதும் மிகுந்த பற்றுடையவராக இருந்தார். 1951 ம் ஆண்டு ஆந்திர பிரிவினையின் போது நடந்த சதிகளை குறிப்பிட்டு தனது பத்திரிக்கையில் எழுதியுள்ளார். குறிப்பாக வட வேங்கடம் (திருப்பதி) சித்தூர் உள்ளிட்ட தமிழ் பகுதிகளை தமிழ்நாட்டிடம் இருந்து பிரிக்கும் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும் என்றார். இந்த விடயத்தில் நேரு தமிழ்நாட்டை இரண்டாம் பட்சமாக நடத்துகிறார். என்றார்.
தேசிய கவி அர்த்தநாரீச வர்மா தம் இளமைக் காலத்தில் வசதியாக வாழ்ந்தவர். நாட்டிற்காக. தமது சொத்துக்களை இழந்து ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டார்
தொண்டு! தொண்டு!! தொண்டு !!! தேசத்தொண்டு! குலத்தொண்டு! மொழித்தொண்டு! எனதன் வாழ்நாளை தேசத்தொண்டாகவே கழித்த வர்மா அவர்கள் 07.12.1964 இல் திருவண்ணாமலையில் மறைந்தார்.
அன்னாரது தியாகம் போற்றப்பட வேண்டும்.
வர்மா அவர்களது பத்திரிக்கை தடை செய்யப்பட்ட இந்திய நாடாளுமன்றத்தில் அவரது புகழ்
போற்றப்படவேண்டும்.
அவருக்கு சிலை வைக்க வேண்டும்.
அஞ்சல் தலையில் அவரது திருஉருவம் இடம் பெற வேண்டும்.
வர்மா அவர்களின் தொண்டை நாடறியச் செய்ய வேண்டும்.
வர்மாவின் தேசபக்திப் பாடல்கள் பாட நூல்களில் சேர்க்கப்பட வேண்டும்.
இராஜரிஷி அர்தநாரீச வர்மா அவர்கள் அவதரித்த சேலத்தில், விமான நிலையத்திற்கோ பேருந்து நிலையத்திற்கோ அல்லது தொடர்வண்டி நிலையத்திற்கோ அவரது பெயர்
சூட்டப்பட வேண்டும்.
தேசியகவி அர்த்தநாரீச வர்மா பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட வேண்டும்.
கவிச்சிங்கம் முக்தியடைந்த திருவண்ணாமலையில் அவருக்கு நினைவு மண்டபம் கட்டப்பட
வேண்டும்.
வர்மா ஐயா அவர்களின் பிறந்தநாளில் அவரின் தியாகத்தை போற்றி வணங்குவோம்._ ச.பற்குணன் ஆசிரியர் அரசியல்களம் மாதம்இருமுறை இதழ்.
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்