14 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பை கேரளாவுக்கு தூக்கிக் கொடுக்கும் தமிழக அரசு…
கேரள மாநில அரசு தமிழக எல்லையோரங்களில் அத்துமீறி நடத்தி வரும் டிஜிட்டல் ரீ சர்வேயை நிறுத்தவில்லை என்றால் எல்லையோர மாவட்டங்களில் போராட்டத்தை தீவிர படுத்துவோம்.
கேரளாவின் 66 வது நிறுவன தினத்தையொட்டி, மக்களுக்கு நிலம் தொடர்பான சேவைகளை விரைவாக வழங்குவதை உறுதி செய்வதற்காக,கேரள மாநில அரசு டிஜிட்டல் மறுகணிப்பைத் தொடங்கியது.
1966 ஆம் ஆண்டு கேரள அரசால் நிலத்தை மீள் அளவீடு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது. இருப்பினும், நவீன தொழில்நுட்பம் இல்லாததாலும், பாரம்பரிய அமைப்புகளின் வரம்புகளாலும் அது ஒருபோதும் முடிக்கப்படவில்லை.
எனவே, மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட நிலமற்ற குடும்பங்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மனை வழங்குவதற்காக என்டே பூமி (எனது நிலம்) என்ற டிஜிட்டல் நில மறு ஆய்வுத் திட்டத்தை கேரள மாநில அரசு தொடங்கியது.
அனைவருக்கும் நிலம்
அனைத்து நிலங்களுக்கும் பதிவுகள்
மற்றும்
அனைத்து சேவைகளும் ஸ்மார்ட்” என்ற மாநில அரசின் கொள்கையின் ஒரு பகுதியாக இது தொடங்கப்பட்டது.
அடுத்த நான்கு ஆண்டுகளில் மறு ஆய்வு முடிக்கப்படும் என்றும், கேரளாவில் உள்ள 1,666 சர்வே கிராமங்களில், 1,550 சர்வே கிராமங்கள் டிஜிட்டல் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மதிப்பீடு 858.42 கோடி ரூபாய். இதில் 438.44 கோடி ரூபாய் ரீபில்ட் கேரளா முன்முயற்சி மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நிலப் பதிவேடுகளை வலுப்படுத்தவும், விவசாயப் புள்ளிவிவரங்களுக்கான தரவு சேகரிப்பை மிகவும் திறம்படச் செய்யவும் இந்த மறு ஆய்வு உதவும்.
வருவாய் மற்றும் பதிவுத் துறைகள் ஒற்றைச் சாளர ஆன்லைன் முறை மூலம் நிலம் தொடர்பான சேவைகளை உரிய நேரத்தில் வழங்க முடியும்.
நிலப் பதிவேடுகளை புதுப்பித்த நிலையில் பராமரிக்க இது அரசுக்கு உதவும், இதனால் இனி மறு ஆய்வு தேவையில்லை என்றும் விரிவான விளக்கத்தை வெளியிட்ட கேரள மாநில அரசு, வேலையையும் நவம்பர் 1,2022 ஆம் ஆண்டு தொடங்கிவிட்டது.
நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் தீவிரமாக இந்த வேலையில் ஈடுபட்டிருக்க, தமிழக அரசு இன்றுவரை தொடர்ந்து மவுனம் காத்து வருவது அத்தனை நல்ல விடயம் இல்லை.
தமிழக-கேரள
எல்லையோரங்களில், மிகப்பெரும் பரப்பை கேரளா கபளீகரம் செய்யப் போகிறது என்று தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வந்த நாங்கள், ஒரு கட்டத்தில் தமிழக வருவாய் துறை அமைச்சர் திரு கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அவர்களை விருதுநகரில் உள்ள அவரது வீட்டிலும், சென்னை தலைமைச் செயலகத்திலும் சந்தித்து விவாதித்தோம்.
தலைமைச்செயலகத்தில் நடந்த விவாதத்தில் அமைச்சருடன் தமிழக வருவாய் துறை செயலாளர் மற்றும் நில அளவை ஆணையர் ஆகியோர் உடன் இருந்தனர். வருவாய்த்துறை செயலாளரின் பொறுப்பற்ற பேச்சால் எங்கள் சந்திப்பு வீணாகிப் போனது.
தமிழக கேரள எல்லையில், கேரளாவில் உள்ள 15 தாலுகாக்களில் நில அளவீட்டை நிறுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுடன் முறைப்படி கலந்து பேசிவிட்டு தான் எல்லை நிலங்களை கேரளா டிஜிட்டல் ரீசர்வே செய்ய வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கொடுத்த குரல் விழலுக்கு இறைத்த நீராகி விட்டது.
அரசு அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய எட்டு எல்லையோர மாவட்ட ஆட்சியர்களும் அது குறித்து கவனம் செலுத்தியதாக தெரியவில்லை.
ஆனால் கேரள மாநில வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் டிஜிட்டல் ரீசர்வே தொடர்பாக மாநிலம் முழுவதும் பம்பரமாக சுற்றிக் கொண்டிருக்கிறார். 70 விழுக்காடு நிலங்கள் Real Time Kinematic முறையிலும், 20 விழுக்காடு நிலங்கள் Robotic Total Station முறையிலும், மீதமுள்ள 10 விழுக்காடு நிலங்கள் ட்ரோன் மூலமும் அளவீடு செய்யப்படும் என்று அறிவித்து கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களையும் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்.
ஆனால் தமிழக அரசோ அல்லது வருவாய் துறை அமைச்சரோ இதுவரை கேரளாவிற்கு சென்று டிஜிட்டல் ரீசர்வே தொடர்பான எவ்வித பேச்சு வார்த்தையையும் நடத்தவில்லை என்பதோடு அது குறித்து எதையும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
தோழர் பினராயி விஜயனோடு நட்பு வேண்டும்தான். அதற்காக சொத்தை எழுதி கொடுத்துவிட்டு தான் நட்பு பாராட்ட வேண்டும் என்றால், அந்த நட்பு கூடா நட்பு என்பதை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உணர வேண்டும்.
அரசு உடனடியாக மாநில அளவில் வருவாய் துறை சார் நிபுணத்துவம் பெற்ற ஒரு கமிட்டியை அமைத்து, கேரள மாநில அரசோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன் வர வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணைக்கான நீதியையாவது நாங்கள் உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டு பெற்றுக்கொள்கிறோம். ஆனால் காலங்காலமாக எங்களுக்கு சொந்தமாக இருக்கும் நிலத்தை கேரளா அபகரிக்க காரணமாக இருந்து விடாதீர்கள்…
டிஜிட்டல் ரீ சர்வே தொடர்பாக கடந்த நவம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து இன்று வரை கேரளா நடத்தி வரும் அளவை குறித்து தெளிவாக விரிவாக தொடர்ந்து எழுதுவேன்…
வருத்தங்களுடன்…
ச.அன்வர் பாலசிங்கம்
ஒருங்கிணைப்பாளர்
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்