Headlines

ஜடேரி நாமக்கட்டிக்கு புவிசார் குறியீடு!

03.08.2023 , சென்னை

ஜடேரி நாமக்கட்டிக்கு புவிசார் குறியீடு!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள கிராமம்தான் ஜடேரி இக் கிராமத்தில் குலத் தொழிலாகவே பல ஆண்டுகளாக நாமக்கட்டி தயாரிப்பு நடந்து கொண்டிருக்கிறது இந்நிலையில், நாமக்கட்டி தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருளான வெள்ளை பாறை இலவசமாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு இத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வைணவ வழிபாட்டு குறியீட்டில் ‘திருநாமம்’ முக்கியமானது.

சென்னையில் உள்ள பார்த்தசாரதி கோவில், திருக்கோவிலூர் அருகே உள்ள ஆதிதிருவரங்கம், திருச்சி அடுத்த திருவரங்கம், மதுரை கள்ளழகர் கோயில், திருமலை திருப்பதி,காஞ்சி வரதராஜபெருமாள் உள்ளிட்ட வைணவ திருத்தலங்களில் பக்தர்களின் நெற்றியில் திருநாமம் குறியீடு இருப்பதை காணலாம். மேலும் பல்லாயிரக்கணக்கான வைணவ பக்தர்கள், நெற்றியில் திருநாமம் இடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இத்தகைய பக்தி மிகுந்த திருநாமத்தை, நெற்றியில் இடுவதற்கு பயன்படுத்தப்படும் ‘நாமக்கட்டி’ ஜடேரி கிராமத்தில் தயாரிக்கப்படுகிறது.

இத்தொழிலில் 5 தலைமுறைகளை கடந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

குடிசைத் தொழிலாக, குடும்பத் தொழிலாக நாமக்கட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கட்டி தயாரிப்பதற்கு தேவையான வெள்ளை பாறை, ஜடேரி அடுத்த தென்பூண்டிப்பட்டு கிராமத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. பின்னர் செக்கு இழுப்பதை போல் மாடுகளை கட்டி இழுத்து பவுடராக அரைக்கப்படுகிறது. பின்னர் தண்ணீரில் ஊரவைத்து, கழிவுகள் அகற்றப்படுகிறது. அதன்பிறகு, ஈர பதத்துடன் வெள்ளை மண் தூளாக இருக்கும்போது, நாமக்கட்டிகளாக தட்டி, வெயிலில் காய வைத்து இரசாயன கலப்பில்லாமல் தயாரிக்கப்படுகிறது.

இதையடுத்து நாடு முழுவதும் உள்ள வைணவ திருத்தலங்களுக்கு நாமக்கட்டிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஏற்றுமதியில் முதல் இடத்தில் இருப்பது திருமலை திருப்பதியாகும்.

மேலும் சித்த மருத்துவ பயன்பாட்டுக்கும் நாமக்கட்டி பயன்படுத்தப்படுவதால், மருந்து தயாரிப்பாளர்களும் கொள்முதல் செய்கின்றனர். ஒரு கிலோ நாமக்கட்டி, மிக குறைந்த விலையாக உரூ 30 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் தான் “ஜடேரி நாமக்கட்டி”க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதனால், நாமக்கட்டியை தயாரிக்கும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிபடுத்தி உள்ளனர்.

புவிசார் குறியீடு வழங்கக்கோரி நாமக்கட்டி தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி விண்ணப்பித்திருந்த நிலையில், புவிசார் குறியீடு வழங்கி, மத்திய அரசு அங்கீகரித்துள்ளது இதன்மூலம் நாமக்கட்டி தயாரிக்கும் தொழில் சட்ட ரீதியாக பாதுகாக்கப்படும். விலை உயரவும், உலக நாடுகள் அங்கீகரிக்கவும் வாய்ப்புள்ளது.

நாமக்கட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூறும்போது, “குலத் தொழிலாக நாமக்கட்டியை தயாரித்து வருகிறோம். ஜடேரி கிராமத்தில் ஆண்டுக்கு 100 டன் அளவுக்கு நாமக்கட்டி தயாரிக்கப்படுகிறது. இங்கிருந்து, திருப்பதி உள்ளிட்ட வைணவ திருத்தலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இத்தொழிலில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. நாமக்கட்டி தயாரிக்க தேவைப்படும் வெள்ளைபாறையை வெட்டி எடுக்க, அரசுக்கு பணம் செலுத்துகிறோம். ஒரு யூனிட் வெள்ளை பாறையை வெட்டி எடுத்து கொண்டு வர ரூ.5 ஆயிரம் செலவாகிறது. வெள்ளைபாறையை இலவசமாக எடுக்க அனுமதிக்க வேண்டும். மேலும் மழைக்காலங்களில் நாமக்கட்டியை வெளியில் உலர்த்த முடியாது என்பதால், கிடங்கு அமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும் ஜடேரியில் தயாரிக்கப்படும் நாமக்கட்டிக்கு ‘புவிசார் குறியீடு’ வழங்கப்பட்டுள்ளது பெருமையாக உள்ளது. இதற்காக மத்திய மாநில அரசுகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இத்தருணத்தில் எங்களது நியாயமான கோரிக்கையான வெள்ளைப்பாறை இலவசமாக கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இத்தொழிலை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.

எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்

https://chat.whatsapp.com/ILQI7FykCzqLrA3Ezq2ZNL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *