தமிழ் சினிமா உலகம்
எந்த அளவிற்கு நன்றி கெட்டது என்பதற்கு எஸ்.ஏ.ராஜ்கண்ணு
மறைவு ஓர் உதாரணம்.
என்னஆனார்கள்இவர்கள்?
தமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள்
பல சமூக சீர்திருத்தப் படங்களை எடுத்திருக்கிறார்கள்..
ஆக்ஷன் படங்களால் அதிர வைத்திருக்கிறார்கள்…
காமெடி படங்களைத் தந்து
சிரிக்க வைத்திருக்கிறார்கள்,
காதல் சித்திரங்களைப் படைத்திருக்கிறார்கள்… ஆனால் அப்படிப் படம் எடுத்த பெரும்பாலோரின் சொந்த வாழ்க்கைகள் என்னவோ கண்ணீர் காவியங்களாகத்தான் முடிந்திருக்கின்றன.
1916 -ஆம் ஆண்டு “கீசகவதம்’ என்ற படத்தைத் தயாரித்தவர் நடராஜ முதலியார் என்ற தமிழர். அவருடைய ஸ்டூடியோ எரிந்து போனதால் மகத்தான நஷ்டத்துக்கு ஆளானவர்.
முதல் படத்திலிருந்தே நஷ்டம் ஆரம்பித்திருந்தாலும் கடந்த 90 ஆண்டுகளில் சுமார் ஆறாயிரம் படங்கள் தமிழ்நாட்டில் வெளியாகியிருக்கின்றன என்பதுதான் இந்த மாய உலகின் சுவாரஸ்யமான சூதாட்டத்தின் வெற்றி.
இதில் ஐந்தாயிரம் படங்கள் தோல்வி அடைந்திருந்தாலும் இந்தக் கட்டுரை அந்தப் படங்களைத் தயாரித்தவர்கள் பற்றியதல்ல. சுமார் ஆயிரம் மகத்தான வெற்றிப் படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் பற்றியது.
சூப்பர் ஹிட் படங்கள் தந்த பலரின் இறுதி வாழ்க்கையும் அப்படியொன்றும் பிரகாசமாக இல்லை என்பதுதான் சினிமா தரும் வரலாறு.
அதிர்ச்சியூட்டும் இந்த புள்ளி விவரத்தை இந்தத் தலைமுறையினரின் நினைவுக்கு எட்டிய சில தயாரிப்பாளர்களை வைத்தே கணித்துவிடமுடியும்.
தமிழ் சினிமாவின் புதிய அலையாகக் கொண்டாடப்படும் பாரதிராஜா காலத்திலிருந்தே இதைப் பார்க்கலாம்.
“பதினாறு வயதினிலே’, “கிழக்கே போகும் ரயில்’, “கன்னிப் பருவத்திலே’ போன்ற திரைப்படங்களைத் தயாரித்தவர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு. அவர் படங்களில் நடித்த ரஜினி, கமல், ஸ்ரீதேவி, ராதிகா, கவுண்டமணி, பாக்யராஜ், வடிவுக்கரசி, ராஜேஷ் ஆகியோர் இன்றும் பிரபலமாக இருக்கிறார்கள். இயக்குநர் பாரதிராஜாவை சினிமா சரித்திரம் பொன்னேட்டில் குறித்துவைத்திருக்கிறது… ஆனால், இவர்களுக்கெல்லாம் திருப்புமுனை தந்த எஸ்.ஏ. ராஜ்கண்ணு?
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல் நடிப்பில் “மகாநதி’ படத்தைத் தயாரித்தார். நதி அவரை கரையேறும் வழியைக் காட்டவில்லை. அதற்குப் பிறகு கடைசியாக சூர்யாவை வைத்து பிரசாத் ஸ்டூடியோவில் ஒரு படத்துக்குப் பூஜை போட்டார். ஸ்டூடியோ வாசலில் ஒரு யானை நின்றிருந்தது. விழாவுக்கு வரும் விருந்தினர் ஒவ்வொருவரையும் யானை மீது ஏற்றி வாசலில் இருந்து பூஜை நடக்கும் இடம் வரைக்கும் சுமந்து சென்று இறக்கிவிட்டனர். அந்தப் படம் பூஜையோடு நின்று போனது. கடைசி காசையும் ஆனைக்கே செலவழித்துவிட்டு அமைதியாகிவிட்டார். ஆனைக்கும் அடிசறுக்கும் என்பது இதைத்தானோ?
தம்மை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் என்ற அக்கறையில் எஸ்.ஏ. ராஜ்கண்ணுவுக்கு சில காலம் ராடன் டி.வி.யில் ஒரு பொறுப்பு கொடுத்து சம்பளமும் கொடுத்தார் ராதிகா. வயோதிகம்.. தம் மகள்களின் வாழ்க்கை என காலம் அவரைச் சுழற்றியடித்தது.
அமைதியை மட்டுமே அவசரத் தேவையாக ஆகிப் போனது. பாரதிராஜா, பாக்யராஜ், ராஜேஷ் போன்ற சில அவருடைய அறிமுகங்கள் உதவியோடு
சென்னை புறநகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து 11/07/2023 அன்று மறைந்தும் விட்டார்.
நன்றி!
தகவல் – தமிழ்மகன்.