டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக, மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருமானத்தை கூட்ட வேண்டும் என்ற நோக்கில் மதுபான கடைகளில் இலக்கு நிர்ணயிக்கப்படவில்லை. 500 கடைகள் மூடப்பட்டதால் விற்பனை குறையவில்லை என்றார். அந்த கடைகளை பயன்படுத்தியோர் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வந்துவிட்டனர் என்றார்.
தொடர்ந்து பேசுகையில், பார் உரிமம் உள்ளவர்கள் மட்டுமே அதை, உரிய வழிகாட்டுதல்களுடன் நடத்த வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
90 மில்லி அளவில் டெட்ரா பேக்கில் மது விற்பனை வர வேண்டும் என பொதுமக்கள் விரும்புகிறார்கள். அதனால் மற்ற மாநிலங்களை போல டெட்ரா பாக்கெட்டில் மதுபானம் அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், உடலுக்கு நன்மை தரும் கள் விற்பனை செய்வது பற்றிக் கேட்டால் விவசாயிகளை மனதில் வைத்து அதை செய்யலாம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் கள் விற்பனையில் ஈடுபட்ட மாநிலங்களில் பல பிரச்னைகள் எழுந்துள்ளன. அங்கு நடந்த தவறு இங்கே வந்துவிடக்கூடாது என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது. இருப்பினும் இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.