Headlines

பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் நுழையத் தடை! மதுரை உயர்நீதிமன்றம்.

03.08.2023, சென்னை

பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் நுழையத் தடை! மதுரை உயர்நீதிமன்றம்.

பழநி முருகன் கோயிலில், இந்து மதத்தை சாராதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதித்து அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. பின்னர் அந்த அறிவிப் பலகை திடீரென அகற்றப்பட்டது. இந்த நடவடிக்கை இந்து மதத்தினரின் நம்பிக்கைகளைச் சீர்குலைக்கும் வகையில் உள்ளது.

இதனால் பழநி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் நுழைய தடை விதிக்க வேண்டும். மீண்டும் அறிவிப்புப் பலகையை வைக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்து அல்லாதோர் கோயிலில் நுழையத் தடை என்ற அறிவிப்பு பலகை ஏன் அகற்றப்பட்டது? அந்த அறிவிப்புப் பலகையை, அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

பழநி கோயிலில் பிற மதத்தினர் நுழைவதை தடை செய்வது மத அடிப்படையிலான முரண்பாட்டை உருவாக்கிடும். எனவே, உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் வழிபாட்டு தலங்களாக உள்ள கோயில்களை தங்களது மதவெறி அரசியலுக்கு பாஜக பயன்படுத்துவது அன்றாடம் அதிகரித்து வருகிறது. பழநி கோயிலில் தேவையற்ற பிரச்சினைகளை கிளப்பி போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக இக்கோயிலுக்குள் இந்துக்கள் அல்லாதோரை அனுமதிக்க தடை விதித்து போர்டு வைக்க வேண்டுமென கலகம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இக்கோரிக்கையை ஏற்கும் வகையில் மதுரை உயர்நீதிமன்றம் இந்துக்கள் அல்லாத பிற மதத்தினர் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை வைக்க வேண்டுமென தீர்ப்பு அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழகத்தில் வழிபாட்டு தலங்களில் அனைத்து மதங்களைச் சார்ந்த மக்களும் அமைதியாக செல்வதும், வழிபடுவதும் நடந்து வருகிறது. இந்நிலையில் பழநி கோயிலில் பிற மதத்தினர் நுழைவதை தடை செய்வது மத அடிப்படையிலான முரண்பாட்டை உருவாக்கிவிடும்.

மேலும் 1947-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கோயில்கள் நுழைவு சட்ட விதியை சுட்டிக்காட்டி மேற்கண்ட உத்தரவு வெளியிடப் பட்டுள்ளது.

ஆனால் இச்சட்டத்தில் இந்து மதத்தில் உள்ள அனைத்து சாதியினரும் கோயில்களுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும், சாதி அடிப்படையில் யாரையும் தடுக்கக் கூடாது என்று தான் தெளிவுபடுத்துகிறது. இதர மதத்தினர் கோயிலுக்குள் வருவதற்கு இச்சட்டம் எந்த தடையும் விதிக்கவில்லை.எனவே, தமிழக அரசு இத்தீர்ப்புக்கு எதிராக உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது”, என்று அவர் கூறியுள்ளார்.

எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்

https://chat.whatsapp.com/ILQI7FykCzqLrA3Ezq2ZNL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *