Headlines

ஜூலை படுகொலை : ஆண்டுகள் போனாலும் ஆறாத வடுக்கள்

சிங்களர்களின் ஆட்சிக் காலம் தமிழர்களின் இருண்ட காலம் என்றே வரலாற்றுப் பக்கங்களில் எழுதப்படும் அளவுக்கு மிகவும் கொடுரமானது. இலங்கையின் பூர்வகுடிகளான தமிழர்களின் நிலப்பகுதிகள் சிங்களத்தால் பறிக்கப்பட்ட பின்னாலும் மீதமுள்ளவையே தமிழர் பகுதிகளாக நீடிக்கின்றன. தமிழர் என்ற தேசிய அடையாளத்தை முற்றிலும் துடைத்தழிக்க துடித்த சிங்களப் பேரினவாத அரசு, இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று  இனப்படுகொலை செய்து முடித்திருக்கிறது. காலங்கள் கடந்தாலும் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகள் நம் இரத்தத்தை உறைய வைப்பவை. நடத்தப்பட்ட படுகொலைகள் நம் உணர்ச்சிகளை கொந்தளிக்கச் செய்பவை. ஈழத் தமிழர்களின் வரலாற்றை வாசிப்பவர்கள் கண்ணீரின்றி கடக்க முடியாத  நிகழ்வுகளுள் ஒன்று இந்த கருப்பு யூலை எனப்படும் ஜூலை கலவரம். 1983-ம் ஆண்டு ஜூலை மாதம் சிங்களப் பேரினவாத அரசாலும், சிங்கள இனவெறியர்களாலும் தமிழர்களுக்கு நடத்தப்பட்ட கொடூரங்களே “கறுப்பு ஜூலை” என்று குறிப்பிடக் காரணமாக இருக்கிறது.

ஒரு மனிதன் உணர்ச்சி மரத்துப் போய் நிர்வாணமான நிலையில் தலையில் கை வைத்து அமர்ந்திருக்க, சுற்றிலும் இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரிக்கும் புகைப்படத்தை காணாதவர்கள் இருக்க முடியாது. ஜூலை கலவரத்தின் சாட்சியாக உலகத்தின் மனசாட்சியை உலுக்கிய புகைப்படம் இது. அந்தக் கலவரத்தில்  மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை, சிங்கள இனவெறியர்கள் கண்டந்துண்டமாக வெட்டி வீசினார்கள். குடும்பத்துடன் தமிழர்களை உயிரோடு  தீயிட்டுக் கொளுத்தினார்கள். 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப்பெண்கள் ஈவிரக்கமின்றி இந்த வெறியர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். வணிக வளாகங்கள், கடைகள், எரிபொருள் நிலையங்கள், திரையரங்குகள் என 5000-க்கும் மேற்பட்ட தமிழர்களின் வர்த்தக நிறுவனங்களை குறிவைத்து காட்டுமிராண்டித்தனமாக  சூறையாடினார்கள்.

தமிழர்களின் உடைமைகள், வர்த்தக நிலையங்கள், சொத்துகள் தொடர்பான விவரங்கள் ஏற்கனவே சிங்கள அதிகாரிகளால் கலவரக்காரர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. தமிழர்களின் பொருளாதார அடித்தளத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே நன்கு திட்டமிடப்பட்டு இந்தக் கலவரம் நடந்தது. ஆறு நாட்கள் சிங்கள  வெறியர்களின் கையில் கொழும்பு மாநகரமும், தென்னிலங்கையும் இருந்தது. பெயரளவுக்கு போடப்பட்ட ஊரடங்கிற்கும், சிங்கள ஆயுதப் படை மதிக்காமல் மறுப்பு தெரிவித்து கலவரக்காரர்களுடன் இணைந்து கொண்டு தமிழர்களைத் தாக்கியது. தலைநகரமெங்கும் தமிழர்களின் மரண ஓலங்களும், தீயடங்காது எரியும் தமிழர்களின் வணிக நிலையங்களும் என கொழும்பு கோரமாய்க் காட்சியளித்தது. புத்தரின் கோட்பாடு அன்று பல்லிளித்தது. 1,50,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்கள் உடைமைகள் இழந்து அகதிகளாக்கப்பட்டனர்.

இன்னொரு குரூரமும் ஜூலை 25ம் நாளன்று நடந்தேறியது. கொழும்பின் வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான புரட்சிகர டெலோ அமைப்பை சார்ந்த குட்டிமணி, தங்கதுரை, ஜெகன், காந்திய அமைப்பைச் சார்ந்த மருத்துவர் ராசுசுந்தரம் மற்றும் எஸ்.ஏ டேவிட் உட்பட 37 பேரை சிறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு அவர்கள் அளித்த ஆயுதங்களோடு மிகக் கொடூரமாக கொல்லப்பட்டனர். “அரசு என்னை ஒரு நாள் கொன்று விடும். எனது கண்களை ஈழத் தமிழர்களுக்கு பொருத்தி விடுங்கள். நான் காண இயலாத தமிழ் ஈழத்தை எனது கண்களாவது காணட்டும்!” என்று நீதிமன்றத்தில் கூறியவர் குட்டிமணி. இந்த கண்கள் இருந்தால் தானே ஈழத்தை பார்க்கும் என்று குட்டிமணியின் கண்களைத் தோண்டியெடுத்து, அதனை காலால் மிதித்தான் சிங்கள இனவெறியன் ஒருவன். அந்த நாளோடு மட்டும் அந்தக் கொடூரம் முடியவில்லை. மீண்டும் ஜூலை 28-ம் தேதியும் அந்த சிறையில் தாக்குதல் நடத்தப்பட்டது. 18 தமிழர்கள் கொல்லப்பட்டனர். மூன்றே நாட்களில் 55 தமிழ் கைதிகள் சிங்கள இனவெறிக்கு இரையாக்கப்பட்டார்கள்.

தமிழர் என்ற அடையாளமே சிங்கள வெறியர்களுக்கு வெறியேற்றிக் கொள்ள போதுமானதாக இருந்தது. பெளத்த துறவிகளிலிருந்து சிங்களக் கைதிகள் வரை இனவெறி ஊன்றுவதற்கு வித்திட்டவர் சிங்களர்கள் குருவாக கருதும் அநாகாரிக்க தர்மபாலா.

“சிங்களர்கள் தனித்துவமானவர்கள். நாகரீகமற்ற காடையர்களால் சீரழிக்கப்படும் முன் ஒளிமயமான இந்த அழகிய தீவு ஆரிய சிங்களர்களால் ஒரு சுவர்க்க பூமியாக உருவாக்கப்பட்டிருந்தது” – சிங்கள பெளத்த தேசியவாதத்தின் பிதா என்றழைக்கப்பட்ட அநாகாரிக்க தர்மபாலாவின் கூற்று இவை. ஆனால் திராவிட பழங்குடி இனமான நாகர்களின் தேசமே ஒட்டு மொத்த இலங்கையும் என்பது வரலாற்றாசிரியர்களின் கூற்று. உண்மை வரலாறு இப்படியிருக்க, இடையில் வந்து இலங்கைத் தீவை ஆக்கிரமித்து, பூர்வகுடிகளான தமிழர்களை ஒடுக்க சிங்களர்களுக்கு  வெறியூட்டிய வரலாற்றுத் திரிபுகளை வடிவமைத்தவர்களே இந்த பெளத்த அடிப்படைவாதிகள்.

கருப்பு ஜூலை படுகொலைகளை சர்வதேசப் பத்திரிக்கைகளும் கண்டித்து இவ்வாறு எழுதின.

“ஏனைய ஆசிய நாடுகளின் கலவரங்களிலிருந்து இந்தக் கலவரத்தின் தெளிவான வேறுபாடு, தமிழர்களின் வர்த்தகத் தலங்களைத் தேடி கலவரக் கும்பல்கள் கண்டுபிடித்து தாக்கியதே ஆகும். காவலர்களும், அரசப் படைகளும் கலகக்காரர்களுடன் சேர்ந்தே தாக்கினார்கள்” – பைனான்சியல் டைம்ஸ், 1983 ஆகஸ்ட் 12

“சேர்ந்து வாழ்வது கடினமானதென்றால் வடக்கில் தமிழர்களுக்கு தனி நாடு கோரும் உரிமை இருக்கவே செய்கிறது” – வாஷிங்டன் போஸ்ட் – 1983 ஆகஸ்ட் 4

தமிழ்நாட்டின் பத்திரிக்கைகளும், இந்திய ஒன்றியத்தின் முக்கியப் பத்திரிக்கைகளும் இதனை  தலைப்புச் செய்திகளாக்கின.

தமிழ்நாட்டிலும், உலகத் தமிழர்களிடையிலும் இந்த ஜூலை கலவரம் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. கட்சி, அமைப்பு வேறுபாடுகளின்றி தமிழகத்தின் பொதுமக்கள் இலங்கை அரசுக்கெதிரான பேரணி, ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என தங்கள் தமிழீழ உறவுகள் கொன்றொழிக்கப்பட்டதை கண்டித்து திரண்டார்கள். சர்வதேச சமூகமும் கண்டனத்தை தெரிவித்தன. இந்த ஜூலை கலவரம், பல்லாயிரம் தமிழ் இளைஞர்களை ஆயுதம் தரித்த விடுதலைப் போரில் சேர உந்தித் தள்ளியது. தமிழ்நாட்டு தமிழர்கள் இந்திய படையை அனுப்பி அமைதியை நிலைநாட்ட கோரிக்கை எழுப்பியதும் ஜூலை கலவரத்தால் உருவானது.

கறுப்பு ஜூலை என்பது ஜூலை மாதத்தில் ஆரம்பித்த நிகழ்வு அல்ல. அது மே மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக நடந்து வருவது. 1983 மே மாதத்தில் அங்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்க கூடாது என்று தமிழீழ விடுதலைப்புலிகள் கொடுத்த அழைப்பின் பேரில் தமிழர் பகுதியில் 98 சதவீதம் பேர் தேர்தலை முற்றுமுழுதாக புறக்கணித்தார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையில் தமிழர் பகுதியில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் ஜெயவர்தனேவை கடுங்கோபம் அடைய செய்தது. இதனால் ஜெயவர்த்தனே தனது படைகளை கட்டவிழ்த்துவிட, தமிழர் பகுதிகளில் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். வீடுகள் எரிக்கப்பட்டன. சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இந்த பதட்டம் வவுனியா முழுவதும் பரவியது. பின்பு திரிகோணமலை பகுதிகளிலும் பரவியது. 1983 ஜூலை மாதம் நாள்தோறும் தமிழர்கள் கொல்லப்படுவது வாடிக்கையாகி போனது. ஜூலை 23-க்கு மேல் இது உச்சத்தை அடைந்தது. இதன் பின்பு தமிழீழ விடுதலைப் புலிகள் விடுத்த பொது கடையடைப்பு முழுவீச்சில் நடைபெற்றது. அப்போது கொழும்புவிலிருந்து வந்த யாழ்தேவி தொடருந்து தமிழ் இளைஞர்களால் தீயிடப்பட்டது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தினால், யாழ்ப்பாண பத்திரிக்கைகளுக்கு தடைவிதிக்கப்பட்டன.

தொடர்ந்து, திருநெல்வேலி தாக்குதல் எனப்படும் கன்னிவெடி தாக்குதலில் 13 இலங்கை ராணுவத்தினர் கொல்லப்படுகின்றனர். யாழ்ப்பாணத்திலேயே அவர்கள் உடல்களை அடக்கம் செய்திட இராணுவத்தினர் விரும்பிய போதும், ஜெயவர்த்தனே அவர்களது உடலை கொழும்புவில் சிங்கள மக்கள் மத்தியில் பார்வைக்கு வைத்து அடக்கம் செய்ய முடிவெடுத்தார். சிங்கள அரசான ஜெயவர்த்தனா அரசு ராணுவத்தினரின் மரணத்தை இனவெறி தூண்டும் நிகழ்வாக மாற்றியது. எந்த இராணுவ வீரர்கள் மறைவிற்கும் கடைபிடிக்காத புதிய முறைகளில் இந்த இராணுவத்தினருக்கு சவ ஊர்வலம் நடந்தது. சவப்பெட்டியில் எடுத்து வராமல் வேண்டுமென்றே சூழ்ச்சியுடன் பாலிதீன் பைகளில் பிணங்களை கட்டிக் கொண்டு வந்தார்கள். இருட்டும் வரை சவ ஊர்வலத்தை தாமதப்படுத்தி சிங்களவர்களிடம் கொதிப்புணர்வை தூண்டச் செய்தார்கள். இந்த தாமதம் பெரும்பாலான சிங்களவர்களை கொழும்பை நோக்கி வரச் செய்வதற்கு போதுமான காலமாக இருந்தது. அரச பயங்கரவாதிகளின் குரூரப் புத்தியால் தூண்டப்பட்ட சிங்கள வெறியர்களால் அப்பாவித் தமிழர்களின் இரத்தம் ஆறாக ஒடியது. படிப்படியாக தென்னிலங்கைக்கும் வன்முறை பரவியது. இதனால் 1,50,000-க்கும் மேற்பட்டோர்  தங்கள் உடைமைகள் இழந்து அகதிகளாக்கப்பட்டனர்.. மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர்  மாண்டனர். அரச பயங்கரவாதப் படைகளால் திட்டமிடப்பட்டு நிகழ்த்திய படுகொலை என்பதை “கறுப்பு ஜூலை” வெளிச்சமிட்டு காட்டியது.

“கறுப்பு ஜூலை” தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட மிகக்கொடூரமான இனவெறி தாக்குதல் என்றாலும், ஆங்கிலேயரிடமிருந்து இலங்கை தீவு விடுதலை பெற்றது முதல், சிங்களவர்களின் ஆட்சியின் கீழ் தொடர்ச்சியாக தமிழர்கள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட இனவெறி தாக்குதல்கள் அதற்கு அடித்தளமிட்டுள்ளன எனலாம்.

1956-ல் “சிங்களம் மட்டும்” இயக்கம் நடத்திய பண்டாரநாயகா அதிபரான போது, சிங்களத்தை அரச மொழியாக்கி, தமிழ் மொழி கீழிறக்கப்பட்டது. தமிழர்கள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சிங்களம் மொழி தெரிந்தாக வேண்டும், இல்லையென்றால் பதவி உயர்வு, ஊதிய உயர்வு இல்லை என ஆணை பிறப்பிக்கப்பட்டது. அப்பொழுது தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய சமஷ்டிக் கட்சியான தந்தை செல்வா தலைமையில் இயங்கிய தமிழரசு கட்சி அமைதிவழிப் போராட்டமே நடத்தியது. அதற்கு பலன் அம்பாறை மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை மற்றும் வணிக வளாகங்கள் சூறையாடப்பட்டது.

1958-ல் இனவெறி ஊட்டப்பட்ட மிருகங்களின் வேட்டையாடலில் 150-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். கொழும்பிலிருந்து 10,000-க்கும் மேற்பட்டோர் அகதிகளாகி வடக்கு, கிழக்கு பகுதிக்கு சென்றார்கள். அப்பொழுதும் தன்னாட்சி கோரிக்கையை வெகு ஜன மக்களிடம் எடுத்துச் செல்ல சமஷ்டிக் கட்சி அறவழியிலேயே போராடியது. 1961லிலும் அதே அறவழிப் போராட்டம் தான் நடத்தியது. அதே ஆண்டு 3 மாத காலம் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தால் வடக்கு, கிழக்கு பகுதியிலுள்ள அரசு நிறுவனங்கள் முடங்கியது. சிங்கள சட்டத்திற்கு புறம்பாக தமிழ் தேசிய அஞ்சல் தலைகள் சமஷ்டிக் கட்சியால் வெளியிட்டது. ஒரு அஞ்சல் தலைக்காக அறவழிப் போராட்ட தலைவர்களை அடித்து ஒடுக்கிட ஆயுதப் படைகளை ஏவியது சிங்களப் பேரினவாத அரசு. எப்பொழுதும் இலக்காகும் அப்பாவி மக்கள் அப்பொழுதும் காவலர்களின் குண்டாந்தடிகளுக்கு இரையானார்கள்.

இப்படியே அறவழிப் போராட்டங்களும் தமிழர் படுகொலைகளும் தொடர்ந்த வண்ணமிருக்க தமிழர்களுக்கான அறவழிக் கட்சிகள் தமிழர்களின் அரசியல் சுதந்திரத்தை, தமிழ் தேசிய அடையாளத்தை காப்பாற்ற இணையத் துவங்கின. அவர்களும் இலட்சியத்தின் பாதைகளை விட்டு பாராளுமன்றப் பதவிக்குள் முடங்கி விட்டனர்.

இதற்கிடையில் இலங்கை அரசின் 1967, 1971, 1979-ம் ஆண்டுகளில் கொண்டு வந்த தரப்படுத்துதல் சட்டங்கள் தமிழர்களின் கல்வியில் பேரிடியாய் நுழைந்தது. அதாவது, அதிக புள்ளிகள் பெற்ற, திறமை வாய்ந்த தமிழ் மாணவர்கள் வாய்ப்புக்களை இழக்க, குறைந்த புள்ளிகள் பெற்ற சிங்கள மாணவர்கள் அந்த வாய்ப்புக்களை பெற்றனர். வேலை வாய்ப்பின்றி, உயர் படிப்புக்கு வழியுமின்றி விரக்தியும், சலிப்பும்  புறவய சூழலாக இளைஞர்களை புரட்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கத் தூண்டியது. அறவழி விரும்பாதவர்கள் தமிழர்கள் எனும் போலி பிம்பம் கட்டமைக்கப்படுவது உண்மையல்ல என்பதற்கும், தமிழினம் சிங்களப் பேரினவாதம் அடிக்க அடிக்க தன் கன்னங்களைக் காட்டிக் கொண்டே தானிருந்தது என்பதற்குமே இந்த அறவழிப் போராட்டங்களின் சான்றுகள்.

பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட பொழுதும் இயேசுவின் போதனைகளையும், புத்தனின் கோட்பாட்டினையும் வரித்துக் கொண்டு அமைதியாகவே கடந்தார்கள் தமிழர்கள். இனியும் இப்படியே கடந்தால் உயிருக்கு நிகரான மொழியும், இனத்திற்கு உயிரான பண்பாடும் அழிக்கப்பட்டு விடும் ஆபத்து தோன்றியதாலேயே ஆயுதம் தரித்த போராட்டக் குழுக்கள் உருவாயின. அதில் விடுதலைப் புலிகளின் இயக்கம் சீரிய பண்பாலும், ஒழுக்க நெறியாலும் சிங்களப் படைகளை எதிர்த்தது. போர் அறம் கொண்டவர்கள் ராணுவத்தினை எதிர்த்து நின்றார்கள் ஆனால் இனவெறி கொண்ட சிங்கள அரசோ அப்பாவி மக்களை இலக்காக்கியது.

“கறுப்பு ஜூலை” நிகழ்வு காலங்கள் கடந்தாலும் தமிழர்களின் மனதில் ஆறாத காயங்களையும், தீராத வலிகளையும் தமிழர்கள் மனதில் கிளறிக் கொண்டேயிருக்கும். சிங்களப் பேரினவாத அரசு ஆயிரக்கணக்கான தமிழர்களை அழித்தொழித்த 1983-ம் ஆண்டின் கறுப்பு ஜூலையும், இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த 2009-ம் ஆண்டின் மே மாதமும் என்றென்றும் தமிழர்கள் மறக்கவும், மன்னிக்கவும் மாட்டார்கள்.

“எங்கள் சிக்கல்களுக்கு அமைதி வழியில் தீர்வு காண வேண்டுமென்றால் இனப்படுகொலை செய்யும் சிங்கள ஆட்சியாளர்களின் மனப்போக்கு மற்றும் அணுகுமுறையில் அடிப்படை மாற்றம் வேண்டும்” என்றார் தேசியத் தலைவர் பிரபாகரன். பெளத்த அடிப்படைவாத, சிங்களப் பேரினவாத மனப்போக்கு கொண்டவர்கள் ஆளும் வரை இலங்கைக்குள் தமிழர்களுக்கு தீர்வு என்பது கானல் நீரே.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *