Headlines

`இதுக்கு ஏன்பா கவலைப்படுற நான் இருக்கேன்’ – தனி ஆளாக 1 ஏக்கர் நிலத்தில் நடவு செய்த கல்லூரி மாணவி

03.08.2023, சென்னை

`இதுக்கு ஏன்பா கவலைப்படுற நான் இருக்கேன்’ – தனி ஆளாக 1 ஏக்கர் நிலத்தில் நடவு செய்த கல்லூரி மாணவி

ஒரத்தநாடு அருகே நடவு செய்வதற்கு ஆட்கள் கிடைக்காததால் கல்லூரி மாணவி ஒருவர் தனக்குச் சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நின்று நெற்பயிரை நடவு செய்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதுடன் பலரும் அந்த மாணவியை பாராட்டி வருகின்றனர்.

ஒரத்தநாடு அருகே உள்ள அக்கரைவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையன், இவரின் மனைவி காந்திமதி. இவர்களுக்கு விவசாயம்தான் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இவர்களுக்கு ராஜலெட்சுமி என்ற மகள் இருக்கிறார். அவர் ஒரத்தநாடு அரசு கலைக் கல்லுாரியில் பி.எஸ்ஸி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். மகள் கல்லூரியில் படித்து வந்தாலும் அவருக்கு கருப்பையன் விவசாயப் பணிகளை கற்றுக் கொடுத்தே வளர்த்து வந்துள்ளார். இதனால் படிக்கிற நேரம் தவிர மற்ற நேரங்களில் தந்தைக்கு உதவியாக ராஜலெட்சுமியும் அவ்வப்போது விவசாயப் பணிகளைச் செய்வார்.

இந்த நிலையில், கருப்பையன் தனக்குச் சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் ஆழ்குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சி நெற்பயிர் நடவு செய்வதற்கான பணியைத் தொடங்கினார். நடவுப் பணியைச் செய்வதற்காக விவசாயத் தொழிலாளர்களிடமும் சொல்லி வைத்திருந்தார். ஆனால், அவர்கள் வரவில்லை எனத் தெரிகிறது. பின்னர், தொடர்ந்து தேடியும் நடவுக்கு ஆள் கிடைக்கவில்லை. இதை கருப்பையன் தனது வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி புலம்பி வந்துள்ளார். இதைக்கேட்ட ராஜலெட்சுமி இதுக்கு ஏம்பா கவலைப்படுற நான் நடவு நடுகிறேன்’ எனக் கூறியுள்ளார். நடவுப் பணி செய்வது தன் மளுக்கும் தெரியும் என்றாலும்ஒரு ஏக்கர் வயலில் எப்படி நீ மட்டுமே நடவு செய்வாய், விளையாடாதம்மா’ என தன் மகளிடம் கருப்பையன் கூறியிருக்கிறார். ஆனாலும் ராஜலெட்சுமி விடாப்பிடியாக பெற்றோர்களைச் சம்மதிக்க வைத்தார். இதையடுத்து, அப்பா நடவுக்கு உதவியாக இருக்க மகள் 3 நாள்களில் 1 ஏக்கர் நிலத்திலும் தனி மனுஷியாக நின்று நெற்பயிர்களை நடவு செய்யும் பணியை வெற்றிகரமாக செய்துமுடித்தார். இந்தத் தகவல் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்குத் தெரியவந்ததும், விவசாயம் என்றாலே தலைதெறிக்க ஓடுபவர்களுக்கு மத்தியில் தனி ஆளாக நின்று நடவு செய்த ராஜலெட்சுமியை அனைவரும் பாராட்டினர்.

இது குறித்து மாணவி ராஜலெட்சுமி கூறியதாவது, “நடவு செய்ய நாற்று எல்லாம் தயாராக இருந்த நிலையில், நடவுக்கு ஆட்கள் வரவில்லை. ஆள்பாற்றாக்குறை அடிக்கடி ஏற்படுகிறது. நாற்று விடுவது தொடங்கி நடவு நட்டு அதை வளர்த்து அறுவடை செய்வதற்குள் விவசாயிகள் படும் கஷ்டத்துக்கு அளவே இல்லை. இந்த வேலை தெரிந்ததால் அந்தக் கஷ்டத்தை நான் நன்கு உணர்வேன். பயிர் தயாராக இருந்தும் நட முடியவில்லை என அப்பா கவலைப்பட்டதைப் பார்த்த பிறகு, ஏன் நாமே நடவு நட்டால் என்னவென்று தோன்றியது அதை அப்பாவிடம் கூறினேன். வேண்டாம்மா இது ஒரு ஆள் செய்கிற வேலை கிடையாது என்றவரை சம்மதிக்க வைத்து பணியில் இறங்கினேன். 23-ம் தேதி காலை தொடங்கிய வேலையை மாலை வரை செய்தேன் ஆனால், ஒரு பகுதி மட்டுமே செய்ய முடிந்தது. இதைத்தொடர்ந்து அடுத்த இரண்டு நாள்கள் காலை கல்லூரிக்குச் சென்றுவிட்டு மதியம் வந்த பிறகு நடவுப் பணியைத் தொடங்குவேன். மூன்று நாள்களில் 1 ஏக்கர் நிலத்தையும் நட்டு முடித்தேன். அப்பா உடன் இருந்து மற்ற வேலைகளைச் செய்ததோடு உற்சாகமும் படுத்தினார். இதே மாதிரி தன்னம்பிக்கையோடு இரு’ என அம்மாவும் அருகில் இருந்தவர்களும் பாராட்டி வாழ்த்தினர்” என தெரிவித்தார்—!!

நன்றி ;
மோனிசா நாடார்

எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்

https://chat.whatsapp.com/ILQI7FykCzqLrA3Ezq2ZNL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *