03.08.2023 ,
ஆடிப்பெருக்கு என்றால் ஆடி மாதம் 18-ந் தேதியை குறிக்கும். ஆடி மாதம் 18ம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை குறிக்கும் ஒரு பண்டிகையே ஆடிப்பெருக்கு ஆகும். ஆடிப்பெருக்கை ஆடி 18, பதினெட்டாம் பெருக்கு, ஆடி நோம்பி என்றும் மக்கள் அழைப்பார்கள்.
மாங்கல்யம் மாற்ற உகந்த நேரம்
ஆடிப்பெருக்கு தினத்தின் மிக முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது தாலி பிரித்து கோர்ப்பதே ஆகும். புதுமணத் தம்பதிகளுக்கு ஆடி 18 என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாள் ஆகும். படித்துறைகளில் குவியும் புதுமணத் தம்பதிகளில் மனைவிமார்களுக்கு அவர்களது கணவன்மார்கள் தாலியை பிரித்து மஞ்சள் கயிற்றில் மங்களகரமான புது தாலியை அணிவிப்பார்கள்.
புதுமணத் தம்பதிகள் மட்டுமின்றி ஆடிப்பெருக்கு அன்று திருமணமான சுமங்கலி பெண்களும் தங்களது புதிய மஞ்சள் கயிற்றில் தாலியை மாற்றிக் கொள்வார்கள். திருமணம் ஆகாத பெண்களும் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக மஞ்சள் கயிற்றை கழுத்தில் அணிந்து வழிபாடு மேற்கொள்வார்கள். இந்த ஆண்டு 03-08-2023 வியாழக்கிழமை அன்று காலை 10.35 மணிமுதல் 11.45 மணிவரை மாங்கல்யம் மாற்ற உகந்த நேரமாக கருதப்படுகிறது.
வழிபாடு முறை
ஆடி 18ஆம் நாள் திருவிழா அன்று பெண்கள் மாங்கல்யத்திற்கு பலம் சேரும் வகையில் புது கயிற்றை பூஜை அறையின் முன்னிலையில் அமர்ந்து மாற்றுவது வழக்கம். காவிரி கரையோரம் இருக்கும் மக்கள் ஒன்று கூடி வழிபடுவதற்கு உகந்த காதோலை கருகமணி, வெற்றிலை பாக்கு, வாழைபழம் இவைகளை வைத்து காவிரிதாயை வழிபட்டு ஆற்றோடு செலுத்தி புளி சாதம், சர்க்கரை பொங்கல், தயிர் உணவுகளை சமைத்து காவிரி தாய்க்கு வழிபடுகிறார்கள். இதனை வீட்டிலும் எளிமையான முறையில் எப்படி கொண்டாடுவது என்பதை பார்க்கலாம்.
நம் வீட்டில் இருக்கும் சுத்தமான தண்ணீரில் கொஞ்சம் மஞ்சள் பொடி போட்டு, வாசனை மலர்களுடன் காதோலை கருகமணி வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் வைத்து, காவிரி தாயை மனதார நினைத்து வழிபாடு செய்து விளக்கேற்றி வைத்து நமஸ்காரம் செய்தால் காவிரி தாய் அந்த தண்ணீரில் எழுந்து அருள் புரிவாள். பின்பு மங்களக்கரமான மஞ்சளையும், மகாலட்சுமி நிறைந்த கல் உப்பையும் அன்று கண்டிப்பாக வாங்கி பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யுங்கள். அவ்வாறு செய்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும்.
செய்யவேண்டியவை
தொட்டதெல்லாம் துலங்கும், செய்வதெல்லாம் சிறப்பு பெறும், எடுத்த காரியத்தில் நிச்சய வெற்றி உண்டாகும் என்கிற இந்த சிறப்பான நாளில் மக்கள் தங்கம் வெள்ளி போன்ற பொருட்களை வாங்குவர். ஆனால் இது எல்லாவற்றையும் விட முக்கியமான இரண்டு பொருட்களை வாங்கினாலே போதும். அவை மங்களகரமான மஞ்சலும், மகாலட்சுமி கடாட்சம் நிறைந்த கல் உப்பும் தான் .
இவை இரண்டையும் ஆடி பெருக்கு நாளில் நம் வீட்டில் வாங்கி வைத்தால் நம் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள். சுபிட்சம் நிறைந்திடும். இந்த நல்ல நாளில் எந்த காரியங்கள் தொடங்கினாலும், அது வெற்றியை கொண்டு சேர்க்கும் என்றும் எந்த பொருள் வாங்கினாலும் மேலும் மேலும் பெருகும் என்கிற நம்பிக்கையும் உண்டு. இத்தகையை சிறப்பு வாய்ந்த ஆடிப்பெருக்கு நாளை நீங்களும் குடும்பத்துடன் கொண்டாடி அனைத்து வளமும் பெற்று மகிழுங்கள்.
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்