Headlines

நெய்வேலி பழுப்பு நிலக்கரி அனல்மின் நிலையத்தின் அராஜகத்தை கண்டித்து போராட்டம் நடத்த வந்த மேனாள் மத்திய அமைச்சர் மரு. அன்புமணி இராமதாசு கைது.

28.07.2023, நெய்வேலி,

பாமக தலைவர் அன்புமணி இராமதாசு கைதை கண்டித்து அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

நெய்வேலியில் இயங்கி வரும் மத்திய அரசின் என்.எல்.சி. நிறுவனம், மாநில அரசின்துணையோடு விளைநிலங்களை ஆக்கிரமித்து கையகப்படுத்தி வருகிறது. இது அப்பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்.எல்.சி. நிர்வாகத்தின் இப்போக்கை கண்டித்து நெய்வேலி என்.எல்.சி. தமிழ்நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி இராமதாசு தலைமையில் இன்று நெய்வேலியில் பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பாமகவினர் பங்கேற்றனர்.

இப்போராடத்தைத் தொடர்ந்து நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தை அன்புமணி இராமதாசு தலைமையில் பாமகவினர் முற்றுகையிட முயன்றனர். இதனைத் தடுத்த காவலர்கள் அன்புமணி இராமதாசு உள்ளிட்டோரை கைது செய்தனர். இக்கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டத்தின் போது காவலர்கள் வாகனங்கள் மறிக்கப்பட்டன; இதனையடுத்து பாமகவினரை சம்பவ இடத்தில் இருந்து கலைப்பதற்காக காவலர்கள் தடியடி நடத்தினர். ஆனாலும் பாமகவினர் அந்த இடத்தை விட்டு வெளியேறாத நிலையில் முதலில் தண்ணீரை பீய்ச்சி அடித்தது காவல் துறை பின்னர் கண்ணீர்புகை குண்டுகளை வீசியது. ஒரு கட்டத்தில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தியதும் இதனால் நெய்வேலி பகுதி முழுவதும் போர்க்களமானது.

ஏற்கனவே நெய்வேலியில் பதற்றம் நிலவியதால் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த காவலர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். 10 மாவட்டங்களில் இருந்து காவலர்கள் கடலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டனர். அத்துடன் கடலூர் மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் மரு. அன்புமணி இராமதாசு கைதுக்கு எதிரான போராட்டம், காவல்த்துறையின் பதில் நடவடிக்கையால் கடலூர் மாவட்டத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது. வடக்கு மண்டல ஐஜி என். கண்ணன், விழுப்புரம் டிஐஜி ஜியாவுல் ஹக் உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள் நெய்வேலியில் முகாமிட்டுள்ளனர்.

பாமகவினர் போராட்டத்தில், காவலர்கள் தடியடியில் மொத்தம் 6 செய்தியாளர்கள் படுகாயமடைந்தனர். தற்போது காவலர்கள் கட்டுப்பாட்டில் நெய்வேலி வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்

https://chat.whatsapp.com/ILQI7FykCzqLrA3Ezq2ZNL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *