மணிப்பூர் கடந்த ஒரு மாதமாகப் பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. 80 விழுக்காடு மலைகள் சூழ்ந்தும் நடுவே 20 விழுக்காடு பள்ளத்தாக்கும் கொண்ட இயற்கை எழிலும், அதை இன்னமும் விட்டுவைத்திருக்கும் மக்களும் கொண்ட வடகிழக்கு மாநிலம் மணிப்பூர். அதன் மக்களையோ அவர்களின் உணர்வுகளையோ அறியாத ஒரு குருட்டு அரசியலால் இன்று பற்றி எரிகிறது மணிப்பூர் என்றால் மிகையாகாது.
மலைகள், காடுகள் நிறைந்திருப்பதாலும், சீனா, மியான்மர், பங்களாதேசம் ஆகிய அந்நிய நாடுகள் சூழ்ந்திருக்கும் வடகிழக்கு எல்லை ஆதலாலும் கடந்த காலத்தில் அங்கு இந்திய இராணுவத்தின் அட்டூழியங்களுக்குக் குறைவில்லாமல் போனது. அதற்கு எதிர்வினையாக ஐரோம் ஷர்மிளா உள்ளிட்ட பெண்கள் போராட்டத்தில் குதித்ததும், இராணுவம் ஓரளவிற்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. தன் உண்ணாநிலைப் போராட்டத்தை விலக்கிக் கொண்ட ஷர்மிளா திருமணம் செய்து கொண்டதும், பின்னர் தேர்தலில் நின்று தோற்றுப் போனதும் நம் நினைவுகளில் இருக்கும்.
மணிப்பூரில் மூன்று இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். மியான்மரிலிருந்து ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன் வந்து மணிப்பூரின் பள்ளத்தாக்குகளில் குடியேறிய மைத்திகள். மலைப் பகுதிகளில் பூர்வீகமாக வாழ்ந்து வரும் குக்கி மற்றும் நாக இன மக்கள்.
மைத்திகளின் மொழி தான் மைதிலி. அரசமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் இடம்பெற்ற மொழி. மைத்திகள் தான் பெரும்பான்மையினர். 60 தொகுதிகள் கொண்ட சட்டசபையில் அவர்கள் 40 சட்டமன்ற உறுப்பினர்கள். ஓரளவு கல்வி, வேலைவாய்ப்பு, வசதிகள், அதிகாரம் என பிரிட்டிஷ் அரசுக்கு முன்பும், பிரிட்டிஷ் அரசிலும், நிலங்கள் மற்றும் வசதி வாய்ப்புகள் அதிகம் பெற்றவர்கள். அதனால் சுதந்திரத்துக்குப் பின்னர், பட்டியலின அல்லது இதர பிற்படுத்தப்பட்டோராக பதிவு செய்யப்பட்டுள்ளனர். அந்த இனத்தாரே இதுவரை எந்தக் கட்சியாக இருந்தாலும் முதல்வராக இருந்துள்ளனர்.
குக்கி இன மக்கள் மலைகளில் நாடோடிகளாக வாழ்பவர்கள். வசதிகளும் நில உடைமையும் குறைவானவர்கள். அவர்களுக்கு பழங்குடியின ஒதுக்கீடுகள் கொடுக்கப்பட்டு வந்துள்ளன. அவர்களுடைய சொற்ப நிலங்களை யாரும் வாங்க முடியாத சிறப்புச் சட்டங்களும் இருந்து வந்துள்ளன. மிஷினரிகளின் சேவையால் இவர்கள் பெரும்பாலும் கிறித்துவர்கள். இந்துத்துவத்திற்கு இந்த அரசியல் செய்ய கசக்குமா என்ன?
அங்கு 2017 வரை காங்கிரசு கட்சியும், மாநிலக் கட்சியுமே ஆண்டு வந்திருக்கின்றன. இரண்டாம் முறையாக சென்ற ஆண்டு பா.ஜ.க ஆட்சிக்கு வந்துள்ளது. குக்கி அரசியல் கட்சியின் கூட்டணியாலேயே வெற்றி பெற்ற பா.ஜ.க. அந்த மக்களுக்கே தீமை இழைக்க முடிவெடுத்துள்ளது.
சென்ற பிப்ரவரி மாதத்தில், ஆளும் பா.ஜ.க. அரசு, வனங்களைப் பாதுகாக்க ஒரு கணக்கெடுப்பு செய்கிறோம் என்ற போர்வையில், சோங்க்ஜோன் எனும் கிராமத்தில் வாழ்ந்து வந்த குக்கிகளை இடம் பெயரச் சொல்லி இருக்கிறது. சோங்க்ஜோன் கிராமம், இம்பாலா பள்ளத்தாக்கை ஒட்டிய சுரசந்தர் மாவட்டத்தில் உள்ளது. அரசே அவர்களின் வீடுகளை இடித்துள்ளது. அது நடக்கும்போதே, மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் வழி, மைத்தி இனத்தையும் பழங்குடியினத்தில் சேர்க்க வேண்டும் என தீர்ப்பு வாங்கி இருக்கிறது.
கொதித்துப் போன குக்கி மாணவர் படையினர், தங்கள் மீதான இந்த இரண்டு தாக்குதல்களுக்கும் எதிர்வினையாக அந்த மக்களை வைத்து ஒரு பேரணியை மே3 அன்று சுரச்சந்தர் மாவட்டத்தில் நடத்தி உள்ளார்கள்.
எதுவுமே நடவாதது போல, அங்கு ஒரு உடற்பயிற்சிக் கூடத்தைத் திறந்து வைக்க வந்த முதல்வர் பைரன் சிங்கை முற்றுகையிட்ட குக்கி மக்கள், கூட்ட அரங்கையே அடித்து உடைத்துள்ளார்கள். அந்தக் கோபத்தில் தான் அந்த மக்கள் மீது கட்டற்ற வன்முறையை அவிழ்த்துவிட்டுள்ளது மணிப்பூர் அரசு.
மாநிலத்தில் இருந்து, கொஞ்ச காலம் இல்லாமல் இருந்த இந்திய இராணுவமும், அசாம் ரைஃபில் படையும் வரவழைக்கப்பட்டு, குக்கி இனப்பெண் கொல்லப்பட்டதாகப் புரளியைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள். இரண்டு பக்கமும் வன்முறை பற்றி எரிந்திருக்கிறது. இணையம், தொலை பேசி போன்ற தொலைத் தொடர்புகளைத் துண்டித்துவிட்டு, ஏறத்தாழ 75 பேரைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியப் பயணம், புதிய நாடாளுமன்றத் திறப்பு என ஒன்றியப் பிரதமரின் முன்னுரிமைகள் மணிப்பூரில் மடிந்த உயிர்களின் மீது கவனம் வராமல் பார்த்துக் கொண்டன. எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு 29.05.23 அன்று, உள்துறை அமைச்சர் வந்தபோது, 40 பேரை உயிர்பலி வாங்கி,144 ஊரடங்கு போட்டு, முதல்வரும் அதிகாரிகளும் பேசி இருக்கின்றனர்.
அப்போதும் வன்முறை குறையவில்லை. ஒரு நாளைக்குப் பத்துப் பேர் வீதம் கொல்லப்படுவதாகச் செய்திகள் வருகின்றன. இப்போது அரசு வேறு கதை சொல்கிறது . இது இரு இனங்களுக்குள் நடைபெறும் சண்டையில்லை, அரசுக்கும் தீவிரவாதத்துக்கும் நடைபெறும் சண்டை என்கிறது.
பா.ஜ.க. வை நம்பி ஏமாந்து, தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் அந்த குக்கி மக்கள் தானே இப்போது தீவிரவாதிகள்? மைத்தி மக்களுக்கும் பழங்குடியினத் தகுதி கிடைத்துவிட்டால், குக்கிகளின் நிலங்களை வாங்குவதும், அவர்களின் வாய்ப்புகளை இன்னமும் பறிப்பதும் மைத்தி மக்களை ஆதிக்கவாதிகளாகவும், குக்கி மக்களை அகதிகளாகவும் மாற்றும்! இந்துத்துவம் ஒருபோதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நிற்காது என்பதற்கு இது மற்றொரு சான்று!