சென்னை: கொரோனா தொற்று பாதிப்பு குறைந்திருந்தாலும் கடந்த சில நாட்களாக சென்னை மக்கள் திடீர் காய்ச்சல் மற்றும், உடல்நலக் கோளாறுகளை சந்தித்து வருகின்றனர். இது குறித்து சென்னை பெரு மாநகராட்சி நகர சுகாதார அதிகாரி டாக்டர் எம் ஜெகதீசன் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பானது மற்ற நகரங்களை விட சென்னையில்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஆனால் கொரோனா அச்சம் நீங்கி ஒரு வருடம் ஆன நிலையிலும் சென்னை மக்கள் தொடர்ந்து அவ்வப்போது சில உடல்நலக் கோளாறுகளை எதிர்கொண்டு வருகின்றனர். திடீர் காய்ச்சலால் சென்னை மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த காய்ச்சல் ஒரு வாரம் வரை உடலை வாட்டி எடுத்து விடுகிறது.
இந்நிலையில் இது குறித்து மாநகராட்சி நகர சுகாதார அதிகாரி டாக்டர் எம் ஜெகதீசன் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, “தற்போது சுவாச ஒத்திசைவு வைரஸ் (RSV), அடினோ வைரஸ் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் ஆகிய வைரஸ்கள் மூலம் காய்ச்சல் பரவி வருகிறது. எனவே 48 மணி நேரத்திற்கு பின்னரும் உடல் வெப்பநிலை இயல்புக்கு திரும்பவில்லையெனில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
பெரும்பாலனோருக்கு எந்த பாதிப்பும் இருப்பதில்லை. ஆனால் சிலருக்கு ரத்த பிளேட்லெட் எண்ணிக்கை திடீரென சரிந்துவிடுகிறது. இவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. சென்னையை பொறுத்த அளவில் வழக்கமாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் டெங்கு, சிக்கன்குனியா காய்ச்சல் பாதிப்பு அதிகமாக காணப்படும். ஆனால் இது தற்போது குறைந்திருக்கிறது. அதற்கு பதிலாக வைரஸ் பாதிப்புகள் தலைதூக்கியுள்ளன. குறைந்தது 10 நாட்கள் வரை இருமல் இருப்பது மேற்குறிப்பிட்ட வைரஸின் பாதிப்புதான். சிலருக்கு உடல் சோர்வு 1 வாரம் வரையும், இருமல் 2 வாரங்கள் வரையும் நீடிக்கிறது.
பிப்ரவரியில் வெப்பநிலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இப்படி இருக்கையில் இம்மாதிரியான காய்ச்சல் வருவது பலருக்கும் வியப்பாக இருக்கலாம், ஆனால் இரவில் நீடிக்கும் குளிரும், அதிகாலையில் இருக்கும் பனியும் இந்த காய்ச்சல் ஏற்படுவதற்கு துணை போகின்றன” என்று கூறியுள்ளார். குளிர் மற்றும் மழைக்காலங்களில் இதுபோன்ற வைரஸ் காய்ச்சல்கள் வருவது இயல்பானதுதான் என்று மருத்துவர்கள் பலர் கூறுகின்றனர். இந்த வைரஸ்கள் வானிலைக்கு ஏற்ப தங்களது மரபணுக்களை மாற்றிக்கொள்வதால் நீண்ட நாட்களுக்கு உடலை வாட்டி எடுத்துவிடுவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதியவர்க