Headlines

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் செய்தி சேகரித்த செய்தியாளர்களை தாக்கிய அரசியல் வாதிகள் மீது  நடவடிக்கை எடுக்க ஊடகவியலாளர்கள் சங்கம் வேண்டுகோள்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் செய்தி சேகரிக்கும் பணியில் இருந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது. அரசியல் கட்சியினர் மீது தேர்தல் நடத்தை விதிமுறைப்படி உரிய நடவடிக்கை எடுக்க அந்த சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்து இருக்கும் அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது, “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் அரசியல் கட்சியினர் பத்திரிகையாளர்கள் மீது நடத்தியுள்ள தாக்குதலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.தாக்குதல் நடத்திய அரசியல் கட்சியினர் மீது அந்தந்த கட்சிகளும், தேர்தல் ஆணையமும், காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, பரிசு பொருட்கள் கொடுப்பது போன்ற நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

பத்திரிகையாளர்களின் கடமை ஜனநாயகத்தின் அடிநாதமான தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டியது தேர்தல் ஆணையத்தின் மிக முக்கியமான கடமை. அதேபோல், தேர்தல் களத்தில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் விதிமீறல்களை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கும் மக்களின் கவனத்திற்கும் கொண்டு சேர்ப்பது பத்திரிகையாளர்களின் ஜனநாயக கடமையாகும்.

அடைத்து வைக்கப்பட்ட மக்கள் இந்நிலையில், நேற்று (21.02.23) ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் அருகே ஒரு இடத்தில் அரசியல் கட்சியினர் மக்களை அடைத்து வைத்திருப்பதாக தகவல் அறிந்து நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் தலைமை செய்தியாளர் ராஜேஷ் குமார் மற்றும் ஒளிப்பதிவாளர் கருப்பையா அங்கு சென்றுள்ளனர்

காங்கிரஸ், திமுக அப்போது அங்கிருந்த மக்களிடம் தங்களுக்கு கிடைத்த தகவலை உறுதி செய்துகொண்டிருந்தபோது, அங்கே இருந்த காங்கிரஸ் மற்றும் திமுகவை சேர்ந்த சிலர் செய்தியாளர் ராஜேஷ் குமார் மற்றும் கருப்பையாவை பணிசெய்யவிடாமல் தடுத்ததுடன், ஒளிப்பதிவாளர் கருப்பையாவை தாக்கியுள்ளனர்.

.
அப்போது அங்கிருந்த அதிமுகவினர் செய்தியாளர் ராஜேஷ் குமாரை கடுமையாக தாக்கியுள்ளனர். ஒளிப்பதிவாளர் கருப்பையாவிடமிருந்த கேமராவை பிடிங்கி கீழே போட்டு உடைத்த பிறகு அவரையும் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் ராஜேஷ் குமாருக்கு கழுத்துப் பகுதியிலும், கருப்பையாவுக்கு கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தற்போது ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தங்கள் கடமையை செய்த பத்திரிகையாளர்கள் மீது கொடூரமான தாக்குதலை நடத்திய காங்கிரஸ், திமுக மற்றும் அதிமுகவினரை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த கட்சிகளின் தலைமை, பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது அமைப்பு ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
தேர்தல் நேர்மையாக நடப்பதற்கு பொறுப்பான தேர்தல் ஆணையம், முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்த பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய அரசியல் கட்சியினர் மீது தேர்தல் நடத்தை விதிமுறைப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.

தாக்குதல் நிகழ்வுகள் தொடர்பாக பத்திரிகையாளர்கள் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த அனைவரின் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுப்பதை தமிழ்நாடு காவல்துறை தலைவர் அவர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *